
தாம் தூம்
முற்றுப்புள்ளியாகிவிட்ட ஜீவா என்ற மகா கலைஞன், ஒளிகளாய் வாழ்ந்திருக்கும் படம்.அவர் நினைத்தது போலவே படம் வந்திருக்கிறதா என்ற கேள்விக்கு பதில், ஜீவாவின் ஆத்மாவிடமே கிடைக்கும்.
மருத்துவ பயிற்சிக்காக ரஷ்யா செல்கிறார் ஜெயம்ரவி. இரண்டு வாரத்தில் திரும்பி வந்ததும் காதலியுடன் திருமணம் என்ற கனவில் இருப்பவரை கம்பி எண்ணவைக்கிறது ரஷ்ய சூழ்நிலை. கொலை வழக்கு ஒன்றில் சிக்கும் நாயகன், தான் நிரபராதி என நிருபிக்க சந்தர்ப்பம் கிடைக்காததால் போலீஸிடமிருந்து தப்பிக்கிறார்.ஒரு பக்கம் ரஷ்ய தாதாக்களின் துரத்தல்,இன்னொரு பக்கம் போலீஸ் விரிக்கும் வலை என ஓடிக் கொண்டே இருக்கும் ரவிக்கு நல்ல நேரம் கிடைப்பதுடன் முடிகிறது கதை.
திரைக்கதையில் பொத்தல் போட்ட லாஜிக்கை சரிசெய்திருந்தால் ஆங்காங்கே தென்படும் குறைகள் இடம் தெரியாமல் போயிருக்கும். அதற்கான வாய்ப்புக்களை நழுவவிட்டிருப்பது யாரின் தவறோ?
முந்தைய படங்களைக் காட்டிலும் ரவி நடிப்பில், அழகில் கூடுதல் மெருகேறியுள்ளார்.கட்டிக்கப் போகும் காதலியுடன் காருக்குள் இளமை திருவிழா நடத்துவதாகட்டும், ஆக்ஷன் தீனிப் போடும் ரஷ்ய போர்சனாகட்டும் தனது கேரக்டருக்குள் திறம்பட பொருந்தியிருக்கிறார்.
கிராமத்து அழகோவியமாக வரும் கங்கனாவிற்கு முதல் படம் என்றால் நம்பமுடியாத அளவிற்கு நடிப்பின் முதிர்ச்சியை காட்டியிருக்கிறார். வாண்டுகளுடன் சிறுபிள்ளையாட்டம் போடுவது, ஜெயம்ரவியை சீட்டாட்டத்தில் கவிழ்ப்பது என தமிழ் நாட்டு ரசிகர்களின் மனசுக்குள் ஒட்டிக்கொள்ளும் ரகமாய் ரசிக்கவைக்கிறார். ஆற்றங்கரையில் நாயகனின் நினைவலைகளில் மென் சோகம் காட்டுமிடத்தில் பிரமாதம்.

Comments